உயரம் தாண்டி பதக்கம் வெல்லும் தடகள நாயகன் : உலகப் போட்டிக்குச் செல்ல பணமின்றி அவதி
ஆஸ்திரேலியாவில் நடந்த ஊனமுற்றோருக்கான ஒலிம்பிக் போட்டியில் "போல்வால்ட்' பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றெடுத்தார் சென்னையைச் சேர்ந்த தடகள வீரர். ஆனால், துருக்கியில் இம்மாத இறுதியில் நடக்கவுள்ள முதல் ஊனமுற்றோருக்கான தடகள போட்டியில் கலந்துகொள்ள நிதியுதவி கிடைக்காமல் அல்லாடும் அவலநிலை, அவருக்கு ஏற்பட்டுள்ளது.
சென்னை அண்ணாநகர் மத்திய வருவாய்த் துறை ஊழியர்கள் குடியிருப்பைச் சேர்ந்தவர் ஜெரால்டு மார்க் வில்காக்ஸ் (31). வாய் பேச மற்றும் காது கேட்க இயலாதவர். இளவயதில் ஏற்பட்ட அம்மை நோயால் அவருக்கு வாய் பேச முடியாமல், காது கேட்க இயலாத நிலை ஏற்பட்டது. ஆனாலும், தடகளத்தின் மீதுள்ள தனது ஆர்வத்தால், இளம் வயதில் இருந்தே தீவிர பயிற்சியில் ஈடுபட்டார். குறிப்பாக, "போல்வால்ட்' எனப்படும் கம்பு ஊன்றி உயரம் தாண்டும் போட்டியில் அதிக ஆர்வம் காட்டினார். அப்போது தமிழகத்தின் தலைச்சிறந்த "போல்வால்ட்' விளையாட்டு வீரரான தீபக் மோசஸ் என்பவரின் 4.10 மீட்டர் உயரமே தமிழகத்தை பொறுத்தவரை சாதனை உயரமாக இருந்தது. 1999ம் ஆண்டு சென்னையில் கல்லூரிகளுக்கு இடையே நடந்த ஏ.ஏல்., தடகள போட்டியில், 4.30 மீட்டர் தாண்டி தீபக்மோசசின் சாதனையை வில்காக்ஸ் முறியடித்தார். அதன்பிறகு, இந்திய அளவில் பல்கலைக் கழகங்களுக்கு இடையே நடந்த போட்டி, அகில இந்திய அளவில் நடந்த போட்டி ஆகியவற்றில் வெற்றிகளை குவித்தார். அதன் பலனாக, விளையாட்டு கோட்டாவில் தெற்கு ரயில்வே அவருக்கு வேலை அளித்தது.
இந்திய அளவில் ஐந்து முறை கலந்துகொண்ட போட்டிகளில் நான்கு முறை பதக்கம், ரயில்வே அணிக்களுக்கான தேசிய அளவிலான மூன்று முறை நடந்த போட்டிகளில் இரண்டு முறை பதக்கம், ஏழு ஆண்டுகளாக தேசிய அளவிலான போட்டிகளில் தமிழகம் சார்பில் பங்கேற்பு என்று அவரின் சாதனை பதக்க பட்டியல் வாசிக்க மூச்சு முட்டுகிறது. அவை அனைத்துமே ஊனமுற்றோர் பிரிவில் இல்லாமல், அனைவரும் கலந்துகொள்ளும் பொதுப்பிரிவில் அவர் கலந்து கொண்டு சாதித்துள்ளது பிரமிப்பூட்டுகிறது.
கடந்த 2005ம் ஆண்டு, ஆஸ்திரேலியா மெல்போர்னில் நடந்த ஊனமுற்றோருக்கான ஒலிம்பிக்கான "டெப் ஒலிம்பிக்ஸ்' போட்டியில் வெள்ளி பதக்கம் பெற்றது, அவரின் சாதனை மகுடத்தின் வைரகல்லாக மின்னுகிறது. இந்நிலையில், வாய்பேச இயலாதவர்களுக்கான இந்திய விளையாட்டு கவுன்சில், துருக்கியில் இம்மாதம் 22ம் தேதி துவங்கவுள்ள, உலக அளவிலான வாய்பேச இயலாதவர்களுக்கான முதல் தடகள போட்டிகளில் கலந்துகொள்ள இவருக்கு அழைப்பு விடுத்துள்ளது. அதற்காகும் செலவுத்தொகை ஒரு லட்சத்து 18 ஆயிரம் ரூபாயை பட்டியலிட்டுள்ளது. இதர செலவுகளை சேர்ந்தால் இரண்டு லட்சம் ரூபாயை எட்டிவிடும். இத்தொகைக்காகத் தான் நண்பர்கள் மற்றும் உறவினர்களை எதிர்பார்க்க வேண்டிய அவலநிலை அவருக்கு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து வில்காக்ஸ் சார்பில் அவரது தந்தையும், பயிற்சியாளருமான டான் வில்காக்ஸ் கூறியதாவது: பொதுவாக ரயில்வேயில் விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்ள வீரர்களுக்கு சிறப்பு சாதாரண விடுமுறை (ஸ்பெஷல் கேஷூவல் லீவு) தருவர். சிலசமயம் பார்வையாளர்களாக செல்பவர்களுக்குக் கூட கொடுப்பதுண்டு. ஆனால், எனது மகனுக்கு துருக்கியில் நடக்கும் விளையாட்டு போட்டிகளுக்காக சிறப்பு விடுமுறை கொடுக்காமல், விடுமுறை விண்ணப்பத்தை, வாரியத்தின் பார்வைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஒலிம்பிக்கில் சாதித்த இந்திய வீரர்களுக்கு பல்வேறு சலுகைகளை அரசு அளித்துள்ளது. ஆனால், ஊனமுற்றோருக்கான ஒலிம்பிக் போட்டியில் வெள்ளி வென்ற எனது மகனுக்கு ஒரு பாராட்டு விழா கூட நடத்தவில்லை.
அகில இந்திய அளவில் சாதித்தது மட்டுமல்லாது உலக அளவிலும் சாதிக்க எனது மகன் தீவிரமாக பயிற்சி எடுத்து வருகிறான். துருக்கியில் நடக்கும் போட்டியில் கண்டிப்பாக தங்கப் பதக்கம் வெல்வான். அதற்கு இரண்டு லட்ச ரூபாய் செலவாகும் நிலையில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் 30 ஆயிரம் ரூபாய் மட்டுமே கொடுக்க ஒப்புக்கொண்டுள்ளது. ஒரு தரமான "போல்வால்ட்' கம்பு வாங்குவதற்கே அத்தொகை சரியாகிவிடும். அதனால், துருக்கிக்கு செல்லும் செலவுத்தொகைக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. இவ்வாறு அவர் கூறினார். இதுதொடர்பாக மேலும் விவரம் வேண்டுவோர், 98843 78016 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்.